அறிவிப்புகள்
சகமனிதன் மீது அன்பு செலுத்தவே மனித ஆற்றல் பயன்பட வேண்டும்: பாரதி கிருஷ்ணகுமார்
Dinamani First Published : 08 Aug 2009 01:38:23 AM IST

 

ஈரோடு புத்தகத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதியை கெüரவித்து, விருது வழங்கும் "தினமணி' ஆசிரியர் கே
ஈரோடு,ஆக. 7: சகமனிதன் மீது அன்பு செலுத்த மட்டுமே மனித ஆற்றல் பயன்படவேண்டும் என்று திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் கூறினார்.

ஈரோடு புத்தகத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு "எய்த விரும்பியதை எய்தலாம்' என்ற தலைப்பில் மேலும் அவர் பேசியது:

இலக்கியப் படைப்புகள் சமயங்களுக்கு அப்பாற்பட்டவை. நல்ல புத்தகங்கள்தான் மனித வாழ்க்கையை செம்மைப்படுத்துகின்றன. அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகள் யாவும் வல்லரசாகிவிட முடியாது. வறுமையும், மதப் பிரச்னைகளும் எங்கு இல்லையோ அந்த நாடுதான் வல்லரசு தகுதியைப் பெறுகிறது.

பேச்சும், எழுத்தும் சம அளவில் வைத்து போற்றப்பட வேண்டும். ஆற்றல்மிக்க பேச்சுகள் மூலம் உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அன்பினால் பெறும் அதிகாரம்தான் நிலைக்கும். உலகில் பல நாடுகள் தன்னுடைய அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள, தன் சொந்த நாட்டு மக்களோடு சண்டையிட்டு வருகின்றன. அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் சிந்தனைகளை அடக்க நினைக்கும் நாடுகள் கண்டிப்பாக சிதைந்துபோகும்.

சகமனிதனின் வளர்ச்சிக்கு மட்டுமே மனித ஆற்றலை பயன்படுத்தும் நிலை உருவாக வேண்டும். தற்போது உள்ள சந்ததியினர் ஒரு நல்ல சமுதாயத்தைப் பார்க்க வாய்ப்பில்லாமல் போனாலும், எதிர்கால சந்ததி, நல்ல சமுதாயக் கட்டமைப்பில் வாழ்வதற்கு களம் அமைத்துக் கொடுக்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். எனவே ஒவ்வொரு பெற்றோரும், குழந்தைகள் மனதில் நல்ல சிந்தனைகளை விதைக்க வேண்டியது அவசியமாகும் என்றார்.

தவறுகளை தட்டிக்கேட்கும்

தன்னம்பிக்கை வேண்டும்

"இனி ஒரு விதி செய்வோம்' என்ற தலைப்பில் "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் பேசியது:

உலகில் உள்ள அனைத்து மொழிகளைக் காட்டிலும், தமிழ்மொழியில்தான் திறமையான எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். ஆனால் இவர்களுக்குரிய அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை. கேரளம் போன்று தமிழகத்திலும் சாகித்ய அகாதெமி ஏற்படுத்த வேண்டும். பிழைப்புக்காக தமிழை உரிமை கொண்டாடும் நிலை மாறி, தமிழுக்காக உண்மையாக உழைக்கும் நிலை ஏற்பட வேண்டும். உணவுக்கு வழியில்லாதவர்களின் வாழ்க்கை நிலையை எவ்வாறு முன்னேற்ற முடியும் என்பதை ஒரு நாடு சிந்திக்க வேண்டும். இதேபோல் வசதியுள்ளவர்களுக்குக் கிடைக்கும் தரமான கல்வி, மருத்துவம் போன்றவை சாதாரண மக்களுக்கும் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் சிந்திக்க வேண்டும். காந்திய சிந்தனைகள் உள்ள மக்கள் இந்த நாட்டில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தவறுகளைத் தட்டிக்கேட்கும் தன்னம்பிக்கை, படித்தவர்களிடமும் உருவாக வேண்டும். நாட்டின் கலாசாரம், உணவு, உடை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றம் சமுதாய கட்டமைப்பை சீரழித்துவிடும். இந்தியர்களுக்கு உலகியல் சிந்தனை உண்டு. இவர்கள் மூலம் இந்தியா உலகுக்கு நிச்சயம் வழிகாட்டும் என்றார்.

எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதி கெüரவிக்கப்பட்டார். கொங்கு பொறியியல் கல்லூரித் தாளாளர் வி.ஆர்.சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மக்கள் சிந்தனை பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் பேசினார்.
 

© All Rights Reserved

Web Design