அறிவிப்புகள்

இராமையாவின் குடிசை கடிதங்கள்

ஜெயராஜ் கடிதம்

jayaraj_letter

தங்கள் இயக்கத்தில் வெளிவந்துள்ள “ராமய்யாவின் குடிசை” என்ற குறும்படத்தைக் காணும் வாய்ப்புற்றேன்.

தங்கள் படத்தை பார்ப்பதற்கு முன்னதாக என்னிடம் குறும்படங்கள் குறித்து சில மன முன்சாய்வுகள் (prejudices) இருந்தன. உங்கள் ஆக்கமும் அத்தகைய ஒன்றாகத்தான் இருக்கப் போகிறதென்ற என் அபிப்ராயத்தை சிதறடிக்கும் ஒரு செம்மையாக வடிவமைக்கப்பட்ட செல்லுலாய்டு செய்தி செதுக்கலாக உங்கள் குறும்படம் இருந்தது.

“1947, ஆகஸ்டு, 15... பாரதம் சுதந்திரமடைந்தது என்று அன்று தொட்டு இன்று வரை ஒலிக்கும் அரசு செயதிப்படங்களின் இயந்திரத்தனமான ஊதுகுழலுக்கும், சித்தரிக்கப்பட்டக் காட்சிகள் என்ற அளவில் மிக கலந்த புனைவிற்கும், “குற்றம் நடந்தது என்ன?” என்ற தொலைக் காட்சி ஏற்ற, இறக்க ஒலி, ஒளி மாயங்களுக்கும் பழகிப்போன எனக்கு உங்கள் படம் ஒரு புதிய அனுபவத்தை அளித்தது.

“கீழவெண்மணி விவசாயிகளின்” கூலி உயர்வுபோராட்டம் என்பது பொதுவுடைமை போராளிகளின் மேடைப் பேச்சுக்களில் அடிக்கடி எடுத்துக் காட்டப்படும் ஒரு துயர சம்பவமாக மட்டுமே பலருக்கும் தெரியும். ஆனால் அந்த சம்பவத்தின் அடி நாதமாக விளங்கும் புரட்சிக் குரல் ஏனோ காலப்போக்கில் மங்கி மறைந்து, காற்றில் கரைந்து போன நிலையில் உங்கள் குறும் படம் அக்னிக்குஞ்சை ஆக்கோரு பொந்திடை வைக்கும் சத்திய ஆவேசத்தை பார்க்கும் யாவரிடமும் கிளர்த்தி இருக்கிறது. அந்த வகையில் ஒரு உணர்வுமிக்க படைப்பாளியின் உன்னத நோக்கம் செழுமை மிக்க செயல்திறம் பெற்றிருக்கிறதென்றால் மிகையில்லை.

எப்பொழுதும், எந்த ஒரு படைப்பையும், முதலாவதாக நுகர்வோனை (இங்கே பார்வையாளனை) உள்வாங்க வேண்டும், தன்னுள் இருத்திவைக்க வேண்டும், உணர்த்த நினைப்பதை அவன் மனதில் பொருத்திவைக்க வேண்டும். இந்தத் தேவைகளை உங்கள் படைப்பு முற்றிலுமாக சாதித்திருக்கிறது.

ஒரு செய்திப்படம் ஒரு வறட்டுத்தனமான சலிப்பைத் தான் தரமுடியும் என்ற நிலைப்பாட்டில், திரையரங்குகளுக்கு செல்லுபவர்கள் “Documentary” தானே போட்டுள்ளார்கள். இதோ Toilet வரை போய்விட்டு வந்து விடுகிறேன் என்று பொதுவாகக் கூறுவதை நான் பெரும்பாலும் கேட்டிருக்கிறேன். உங்கள் படத்தை ஆழ்ந்த அமைதியுடன், கவனம் திசை மாறாது கண்டவர்களைக் கண்டு அதிசயித்தேன். ஒரு விவரணப்படம் எவ்வாறு அமைய வேண்டுமென்பதற்கு உங்கள் படம் ஒரு முன்மாதிரி. உங்கள் குழுவின் ஒருங்குதிரண்ட முயற்சிக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றியிது. உங்களிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கும் சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறீர்கள்.

படத்தின் பிண்ணளி இசையைப் பொருத்த மட்டில் கம்ப்யூட்டர் இசை உபகரணங்களை உபயோகப் படுத்தாமல், குறிப்பாக இசையென்பதை பரிக்ஞை பூர்வமாக உணர்த்தாமல், கிராமிய தோல் இசைக் கருவிகளை பயன் படுத்தியிருப்பது பாராட்டிற்குறியது.

படத்தின் ஒளிப்பதிவும், ஒலிப்பதிவும் கண், காதுகணை சிரமப்படுத்தாமல் அழகியலோடு அமைந்திருப்பதை உணர்கிறேன்.

காவல்துறையை பற்றியும், அரசியல்வாதிகள் பற்றியும் காட்சிகள் வரும்போது நய்களைக் காட்டியுள்ளீர்கள். பார்வையாளனான எனக்குத் தோன்றிய கற்பனைகள் இவை. எலும்புத்துண்டைக் கடித்துவிட்டு ஏவுகிற நபர் மீது பாய்பவை நாய்கள், குலைக்க மட்டுமே இவைகளுக்குத் தெரியும். உணமையான திருடனை பிடிக்கத் தெரியாது. இவையெல்லாவற்றிற்கும் அப்பால் உங்களுக்கு நாயக்ளைக் கட்டோடு பிடிக்காது.

கீழவெண்மணி கிராமம் - இருப்போர், இல்லாதோர்கிடையே நடந்த குருஷேத்திரக் களமாக எனக்குத் தோன்றுகிறது. தண்ணீருக்கு அடியில் பதுங்கியிருந்த துரியோதனனைக் கண்டுபிடித்து பீமன் கொல்வான். சட்டத்தின் கண்களில் மண்ணைத்தூவி தப்பினாலும் குற்றம் புறிந்தவன் தப்புவதற்கு வாய்ப்பில்லை. சகேத்தின் ரௌத்திரம் நின்று கொல்லும் என்ற உண்மை நிலைபெற்றது அங்கே. மாறிக் கொண்டேயிருப்பது தான் சரித்திரம். ஆனாலும் சரித்திரம் மாறாத சில மனோபாவங்களையும், அவைகளுக்கிடையேயான மாறாத போர் முறைமைகளையும், புரட்சிகளையும் பதிவு செய்தே வந்துளள்து. “ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை”.

கீழவெண்மணி கோர நிகழ்வுகளின் நிர்வாண உண்மைகளை படம் பிடித்து காட்டியுள்ள உங்கள் படம் நிர்வாணப்படங்களுக்கு கொடுக்கப்படும் வர்ணமான “blue”ஐ மாற்றி “Red” ஆக்கியுள்ளது என்று நான் என் தனிப்பட்ட பார்வையாக பதிவு செய்கிறேன்.

வெற்றிகள் தொடர்க. வாழ்த்துக்களுடன்,

J.ஜெயராஜ்

வழக்கறிஞர்,

9-13-2/95-C (UpStairs)

வ.உ.சி. மேற்குத் தெரு விரிவாக்கம்,

பாரதிநகர், விஸ்வநாதபுரம்

 

 


 

 

கோதண்டம் கடிதம்

gothandam-letter

நாள் : 04.06.06

 

பேரன்புத் தோழர் பாரதி திருஷ்ணகுமார் அவர்களுக்கு அன்பு வணக்கங்கள்.

ராமையாவின் குடிசை படம் பார்த்தது முதல் மனதில் அந்த காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. கண்கள் பணிக்கின்றன. வீட்டிற்கு வந்ததும் எனது எண்ணங்களை கடிதமாக  எழுதி இன்று அனுப்பியுள்ளேன்.

தொலைக் காட்சி எழுத்தாளர் நேர்காணல் நிகழ்ச்சியை எதிர்பார்க்கிறேன்.

மணிவிழா மலரும் வாழ்க்கைக்குறிப்பும் அனுப்பியுள்ளேன்.

கிடைத்த விபரம் ஒருகார்டில் எழுதி உதவுக.

அன்புடன் தோழமையுடன்.

கோ.மா.கோதண்டம்

  

கோவிந்தராஜன் கடிதம்

govindharaaj-letter

26.01.06

இரவு 11.30

 

கோவிந்த ராஜன். ப.க.

இந்தியன் வங்கி

 

தோழர் வணக்கம். செயற்குழுவின் போது பெற்ற தங்களின் குறுந்தகடு, ராமைய்யவின் குடிசை, எங்கள் குடும்பத்தினருடன முழுவதுமாக, கவனத்துடன் இன்று பார்த்தோம், பரிசீலித்தோம்.

தங்கள் கம்பீரமான குரலை, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கேட்டு, ஒரு வீர வரலாற்றை வித்தியாசமான கோணத்திலும், உணர்வுடனும் உரையாடலுடனும் கேட்கும், பார்க்கும் போது, ஒவ்வொரு வினாடியும் மெய்சிலிர்க்க வைத்தது.

நீங்கள் எங்களுடன் கை சேர்ந்தவர் மட்டுமல்ல, கை தேர்ந்தவர் என்ற எண்ணத்தை விதைத்துள்ளார்கள்.

எங்கள் பிள்ளைகள் மீண்டும் அவ்வரலாற்றினை எங்களிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.

சேலம் மாநாட்டில் உணர்ச்சி பிழம்பாக  வருணித்த போலவே, இக்காட்சிகள் நெருப்பு பிழம்பாக உள்ளன.

தொடரும் உங்கள் முயற்சிக்கு எங்களது வாழ்த்துக்கள்.

தோழமையுள்ள,

கோவிந்தராஜன்

உதவிச் செயலாளர்.

 

 


 

ரவீந்திரன் கடிதம்

reveandran_letter

 

சி.ஆர்.ரவீந்திரன்

3/86, கோவைப்தூர் ரோடு,

பேரூர் செட்டிபாளையம்

கோவை – 641010.

போன் :  2609888

 

அன்பிற்குரிய நண்பர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்களுக்கு, வணக்கம், நலம், நலமே விளைக.

தாங்கள் அனுப்பிவைத்த ‘ராமையாவின் குடிசை’ ஆவணப்படம் கிடைக்கப் பெற்றேன். நன்றி! மகிழ்ச்சி.

இதுவரை கீழவெண்மணி பற்றிய செய்திகளும், மதிப்பீடுகளும் பல வகைக் கோணங்களில் இருந்தன. உண்மைக்கு நெருக்கமாக இருப்பதைத் தங்களது ஆவணப்படம் உணரவைக்கிறது. ஒரு கணம் மனதைக் கசக்கிப் பழிந்து விட்டது. உயிர்த்துடிப்போடு ஒவ்வொரு அம்சமும் படத்தில் வெளிப்பட்டிருக்கிறது. எடிட்டிங் முறை மிகச் சிறப்பாக உள்ளது. ஒன்றை எந்த அளவுக்கு வெளிப்படுத்த வேண்டுமோ அந்த அளவுக்கு வெளிப்படுத்த முனைந்தது குறித்து எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். வழக்கமாகப் பார்க்கிற ஆவணப்படங்களில்ருந்து மாறுபட்டு இருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆவணப்பட இலக்கணத்திற்கும். திரைப்பட இலக்கணத்திற்கும் இடையில் உள்ள இடை வெளியை இந்தப் படம் நிரப்பி இருப்பதாக உணருகிறேன். பார்வையாளர்கள் எந்த வகையிலும் குழப்பமோ, சலிப்போ அடையாதபடி ஒரு விறுவிறுப்பு படம் முழுவதுமாக அமைந்திருக்கிறது.

கடந்த காலத்தை கருப்பு வெள்ளயிலும், நிகழ்காலத்தை வண்ணத்திலும் காட்டியிருப்பது பார்வையாளன் இயல்பாகவே காலங்களை உணரும்படி செய்துள்ளன.

பேட்டியின் போது தெளிவற்ற பேச்சுக்களைச் சரியாக புரிந்து  கொள்ள subtitle பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அதிகார வர்கத்தை சங்கிலியால் கட்டிப்போட்ட நாயாகவும், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையாகவும் உருவகப்படுத்தியிருப்பது மனத்தை தொடும் வகையில் இதமாக உள்ளது. நாகரிகமாகவும் நாசுக்காகவும் அதிகார வர்த்கத்தின் இயலாமையை உணர்த்தியிருக்கிறீர்கள்.

தங்களது படத்தைப் பார்த்த வேகத்திலேயே Front Line  இதழில் திரு.விஸ்வநாதன் அவர்கள் எழுதியிருந்த கட்டுரையை படித்தேன். கீழவெண்மணி நிகழ்ச்சிக் காலத்திய சமுதாய அரசியல். பொருளாதார வாழ்க்கைச் சூழலைச் சரியாகப் புரிந்துகொள்ள முடிந்தது. சார்பு இல்லாத ஒரு வடிவம் மனதுக்குப் புலகுகிறது.

கீழவெண்மணிச் சூழலில் நீதித்துறையின் போதாமையை அல்லது இயலாமையைத் தெளிவு படுத்தியிருக்கிறீர்கள். வன்முறையும் தவிர்க்க முடியாத வகையில் ஒரு நியாயமே என்பதை ஆழ்மனதில் உணரச் செய்திருக்கிறீர்கள. ஒரு பிரச்சாரம் வெளிப்படையாகச் சாதிப்பதைக் காட்டிலும் இநத்க் காலாபூர்வமான ஆவணப்படம் அதிகமாக சாதித்திருக்கிறது. குறையாக எதையாவது கண்டுபிடிக்க முயன்றாலும் இயலாத வகையில் அமைந்திருக்கிறது.

ஒரு ஆவணப்படத்தைக் கவித்துவ நுணுக்கங்களோடு கலாபூர்வமாக வடிவப்படுத்தியிருக்குறீர்கள். பார்வையாளர் மனதில் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அதைச் சாத்தியமாக்கியிருக்கிறீர்கள். சுருக்கமாக சொல்வதென்றால் தங்களது வரலாற்றுக் கடமையை மனநிறைவு தரும் வகையில் நிறைவேற்றியிருக்கிறீர்கள்.

இதுபோன்ற தங்களது முயற்சிகள் தொடர என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

நன்றி

அன்புடன்

C.R.RAVINDRAN

  

தங்கையன் கடிதம்

thangayan_letter

பட்டுக்கோட்டை,

17-1-2006.

இனிய தோழுர் பாரதிகிருஷ்ணகுமாருக்கு வணக்கம்.

தாங்கள் அனுப்பிய ராமையாவின குடிசை, கீழவெண்மணி பற்றிய ஆவணப்பட குருந்தகடு எனக்குக் கிடைத்த அந்த மாலையே பார்த்தேன். மீண்டும் மீண்டும் பார்த்தேன். படத்துடன் ஒன்றிப்போனேன். சில துளி கண்ணீரையும் செலவு செய்தேன். கோழைத்தனத்தின் வேளிப்பாடுதான கண்ணீரென்று சொல்பவர்களை நான் சபிக்கிறேன். வெளியிட்டுச் சொல்ல விலாசம் தெரியாத வேதனைகள் உள்ளத்தில் கிடந்து உறுத்தும்போது ஆறுதலை ஆற்றுப் படுத்தி அரும்பி உதிர்வதுதானேக் கண்ணீர்த் துளிகள்.

படத்தை மிக மிக நன்றாக, நேர்த்தியாக, நுணுக்கமாக செதுக்கி இருக்கிறீர்கள. என் உவகைகளின் விளைச்சலாய் மலர்ந்த வாழ்த்துப் பூக்களை உங்கள் வாசல் முழுவதும் வாரி இறைக்கிறேன் கிருஷ்ணகுமார்.

உங்கள் வாழ்க்கையில், எந்த ஆழிப் பேரலையாலும் அழிக்க முடியாத சிறந்த பதிவை செய்கிருக்கிறீர்கள் என்பது என் நம்பிக்கை. பிறவிப் பெரும் பயன் என்று சொல்லுவார்களே, அதனை நீங்கள் பெற்று விட்டீர்கள் என்பதாய் நான் உணருகிறேன். மண்ணில் தோன்றியவர்கள் மண்ணிலும் கோடி, இனி வருபவர்கள் இதனிலும் கோடி என்று, அந்த காலத்தில், வேற்று நாகரீகங்களின் வீச்சுக்கு எட்டாத தூரத்துக் கிராமத்தில் குடும்பத்தலைவியாய் விளங்கிய என் தாய் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது. மண்ணிலும் கோடியாய் வாழ்ந்து வழிகாட்டிச் சென்றவர்களுள் நினைத்துப் பார்க்கத் தகுதியுள்ளவர்கள் சிலரே. இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர், உழைக்கும் தமிழ் மக்கள் நினைத்துப் பார்க்க தகுதியுள்ளவர்கள், உங்கள் ஒளி முகழும் தனிச் சிறப்போடு விளங்கும் என்பது உறுதி.

படம் தொடர்பான நுட்பம் நான் அரிந்திருக்கவில்லை. பொதுவாக ஒரு சாமான்யன் பார்வையில் சிலவற்றை சமர்ப்பிக்கிறேன். காட்சிகள் சிறப்பாய் தொகுக்கப்பட்டு இணைக்கப் பட்டுள்ளது. காட்சிகள் படமாக்கத்தில் பின் புலத்தின் (Background) மீது சிரப்பாகவே கவனம் செலுத்தி இருக்கிரீர்கள். சமீபத்தில் தொடர்புடையவர்களையெல்லாம் தேடிப் பிடித்து, நிகழ்ந்து போனவைகளையெல்லாம் நினைவுக்கு கொண்டு வந்து சமர்ப்பித்துள்ளவிதம் நன்றாகவேயுள்ளது. கீழவெண்மணி சோக நிகழ்வுகளுக்கு காரணகர்த்தாவாக இருந்த கோபாலகிருஷ்ண நாயுடுவின் முடிவை, நிழலுருவில் அமர்ந்து வாக்கு மூலமாய் வழங்கிய பாங்கு பாராட்டுக்குரியதுடன், நல்லயுக்தியாயும் ஏற்றுக் கொள்ளப்படும் என்பது என் நம்பிக்கை. உங்களுடைய வசீகர, கர்ஜனைக் குரலுடன் சாந்தம் கலந்த தொகுப்பு மிகவும சிறப்பு. எனக்குத் தெரிந்தவகையில் ஒலிப்பதிவில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்மென்பதே. சில பின்புல அமைப்பு சற்று நீல வண்ணம் கூடுதலாக காணப் பட்டதை கவனித்திருக்கலாமோ!? Auto focus -ன் விளைவாகக் கூட இருக்கலாம். அதை நான் அறியேன்.

இயக்கத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் சக்தியும், இதிலிருந்து சற்று தளர்வுடன் இருப்பவர்களுக்கு பல ஆண்டுகளுக்கான (charge) சக்தியும் இந்த குருந்தகடு வழங்கும் என்பது உண்மை. வெண்மணியில் வீர நினைவுகள் எதிர்வர்க்க பிரச்சாரப் புழுதியால் ஒளி இழந்த ஒவியமாகிவிடுமோ என்ற கலக்கம் களைந்த பெருமையை உங்கள் குருந்தகடு பெறுகிறது தோழனே.

இன்னும் நிறைய வண்ண, வாசனை, வசீகர வார்த்தைகளை தேடி அலைகிறது மனசு, இன்னும் பொருத்தமான வாழ்த்தை வரைய....

ஏறாளமான வாழ்த்துக்களுடனும்,

இன்னும் நிறைய எதிர்பார்ப்புக்களுடனும்,

உங்கள் தோழன்,

சி.வ.தங்கையன்

“மகாகவி இல்லம்”

93-P, காந்தி நகர், கரிக்காடு,

பட்டுக்கோட்டை 614 602

Cell: 9443308244

 

 


 

© All Rights Reserved

Web Design